மராட்டியத்தில் 0.22 சதவீத கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே வீண்; மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் பதில்

மராட்டியத்தில் 0.22 சதவீத கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே வீணாகி உள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்து உள்ளது.
0.22 சதவீதம் தான் வீண்
மராட்டியத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் மராட்டிய மாநிலம் 6 சதவீத கொரோனா தடுப்பு மருந்தை வீணாக்கி உள்ளதாக கூறியிருந்தார். இந்தநிலையில் மாநில காங்கிரஸ் மத்திய மந்திரியின் கருத்தில் உண்மையில்லை எனவும், மாநிலத்தில் 0.22 சதவீதம் மட்டுமே தடுப்பு மருந்து வீணாகி உள்ளதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தடுப்பு மருந்து வீணாக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலுடன் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பிரகாஷ் ஜவடேகரே மராட்டியத்தில் 0.22 சதவீதம் மட்டுமே தடுப்பு மருந்து வீணாகி உள்ளது. நீங்கள் கூறிய பொய் போல 6 சதவீதம் இல்லை. உங்களின் பொய்யை மோடி அரசு தான் அம்பலப்படுத்தி உள்ளது.
வருத்தமாக உள்ளதுகுறைந்தளவு மட்டுமே வீண் செய்து, தடுப்பு மருந்து செலுத்துவதில் முதல் இடம் பிடித்த மாநில சுகாதாரப்பணியாளர்களை நினைத்து பெருமை அடைகிறோம். உங்களை போன்ற மராட்டியத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவர்களே மாநிலத்தை அவமானப்படுத்துவதும், குறைத்து மதிப்பீடுவதும் வருத்தமாக உள்ளது.
மேலும் மாநிலத்தில் தற்போது 23 ஆயிரத்து 547 தடுப்பூசி டோஸ்கள் தான் உள்ளது. தேவையான அளவு தடுப்பு மருந்தை மோடி அரசு கொடுக்காத போது, நம்மால் தடுப்பூசி போடும் முகாமை எப்படி திட்டமிட முடியும்?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.