கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும்: சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும்: சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 7 May 2021 5:49 AM IST (Updated: 7 May 2021 5:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அதை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆக்சிஜன் வினியோகம்

டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜனை வினியோகம் செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு அதிகாரிகள் நிறைவேற்றாததால், மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரி மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜனை வினியோகம் செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது

விசாரணை

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், டெல்லிக்கு 740 டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் உள்ள 56 மருத்துவமனைகளை ஆய்வு செய்ததில், அங்கு போதுமான ஆக்சிஜன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

நீங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான திட்டம் வகுக்கும்போது இருந்த நிலைக்கும், இப்போதும் மாறுபட்டிருக்கும். படுக்கைகள் எண்ணிக்கை, அவசர சிகிச்சை பிரிவு பயன்பாடு, ஆக்சிஜன் தேவை ஆகியவை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். அப்போது எடுத்த கணக்கின்படி ஒவ்வொருவருக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டிருக்காது.

குழந்தைகளை பாதிக்கும்

ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. ஆதலால், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் தேவை, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா முழுவதும் முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவும் என தகவல் வந்துள்ளது. 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு உடல்நலமில்லாமல் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் உடன் பெற்றோரும் செல்ல வேண்டியதிருக்கும். ஆதலால், தடுப்பூசியை இந்தபிரிவு மக்களுக்கு முடிக்க வேண்டும்.

மாற்று திட்டம்

3-வது அலை வந்தால், அதை எப்படி கட்டுப்படுத்துவீர்கள். மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இல்லாவிட்டால் என்ன மாற்று திட்டம் வைத்துள்ளீர்கள்.

இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், “சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டினால் பின்பற்றுவோம்” என தெரிவித்தார்.


Next Story