ஜம்போ சிகிச்சை மையங்களை அகற்றாமல் இருந்தது 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியது; மும்பை மாநகராட்சி தகவல்
ஜம்போ சிகிச்சை மையங்களை அகற்றாமல் இருந்தது மும்பையில் 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியாக இருந்ததாக மாநகராட்சி கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தது. இதில் ஏப்ரல் 4-ந் தேதி நகரில் 11 ஆயிரத்து 163 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதை தொடா்ந்து நகரில் தினந்தோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த மாதம் தொடக்கம் முதல் நகரில் பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. 1-ந் தேதி முதல் 4 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளை கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டு பாராட்டி உள்ளது.
சிகிச்சை மையங்கள்இந்தநிலையில் மும்பையில் வார்டு தோறும் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள், முதல் அலையின் போது அமைக்கப்பட்ட ஜம்போ ஆஸ்பத்திரிகளை அகற்றாமல் இருந்தது 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்த உதவியாக இருந்ததாக மாநகராட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், ‘‘ஜம்போ ஆஸ்பத்திரிகளை நாங்கள் அப்படியே வைக்காமல் இருந்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும். ஆக்சிஜன் படுக்கைகள், அவசர சிகிச்சை படுக்கைகள் 2-வது அலை தொடங்கும் முன்பே தயாராக வைக்கப்பட்டு இருந்தது’’ என்றார்.
இதேபோல சமீபத்தில் மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால், வார்டு தோறும் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்), சோதனை முடிவுகளை நேரடியாக நோயாளிகளுக்கு அனுப்பாமல் இருந்தது, படுக்கை மேலாண்மை, ஜம்போ ஆஸ்பத்திரிகளை அழிக்காமல் இருந்தது போன்றவை மும்பையில் 2-வது கொரோனா அலையை எதிர்கொள்ள உதவியாக இருந்ததாக கூறியுள்ளார்.