தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன - மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி கேள்வி


தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன - மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி கேள்வி
x
தினத்தந்தி 29 May 2021 9:50 PM GMT (Updated: 29 May 2021 9:50 PM GMT)

மாநிலங்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கூறப்படும் போது தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன என்று மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 முதல் 44 வயதிற்கு உள்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மாநிலங்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கூறப்படும் போது தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன என்று மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, சிசோடியா நேற்று கூறியதாவது,

டெல்லியில் இதுவரை 1.84 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 92 லட்சம் பேர் 18 முதல் 44 வயதிற்கு உற்பட்டவர்கள். 

தற்போது, கொரோனா தடுப்பூசி இல்லாததால் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி உள்ளதால் அடுத்த மாதம் 5.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசிகளும் ஜூன் 10-ம் தேதிக்கு பின்னர் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகளுக்கும், தனியாருக்கும் இதுவரை கொடுத்த தகவல்களை மத்திய அரசு பொதுவெளியில் பகிர வேண்டும். தடுப்பூசி இல்லை என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவிக்கும் போது தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எவ்வாறு கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு சரியான திட்டமிடல் இல்லை’ என டெல்லி முதல்மந்திரி சினோடியா குற்றஞ்சாட்டினார்.

Next Story