பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல்: சச்சின் பைலட் திட்டவட்ட மறுப்பு


பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான தகவல்: சச்சின் பைலட் திட்டவட்ட மறுப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 6:04 PM GMT (Updated: 11 Jun 2021 6:04 PM GMT)

பா.ஜ,க.வில் தான் சேரப்போவதாக வெளியான தகவலை ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பா.ஜ.க. தலைவர் வெளியிட்ட தகவல்
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் இளம் தலைவராக விளங்கிய முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா, மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் அவர் அந்த கட்சியில் இருந்து 
விலகி பா.ஜ.க.வுக்கு தாவினார். இதையடுத்து அவரைப்போன்று மேலிடத்தில் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கட்சி மாறக்கூடும் என ஊகங்கள் எழுந்தன.இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த 
தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி டி.வி. சேனல் ஒன்றில் பேசும்போது, “பா.ஜ.க.வில் சேருவது தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சினை (சச்சின் பைலட்டை) தொடர்பு  கொண்டு பேசினேன்” என கூறினார். ஏற்கனவே கடந்த ஆண்டு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதும், ஒரு மாத கால அரசியல் குழப்பத்துக்கு பின்னர் அவர் எழுப்பிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு குழு அமைக்கப்படும் என கட்சி மேலிடம் வாக்குறுதி கொடுத்ததும் நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, குழு ஒன்றும் செய்யவில்லை என்றும் சச்சின் பைலட் தரப்பினர் கூறி வந்த நிலையில் ரீட்டா பகுகுணா ஜோஷியின் தகவல், அரசியல் அரங்கை அதிர வைத்தது.

பைலட் மறுப்பு
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சச்சினுடன் பேசினேன் என்று ரீட்டா பகுகுணா ஜோஷி கூறி உள்ளார். அவர் சச்சின் தெண்டுல்கருடன்தான் பேசி இருக்கவேண்டும். அவருக்கு என்னிடம் பேசுகிற தைரியம் கிடையாது. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை கொரோனா தொற்றுக்கு இடையே நாட்டை உலுக்கி வருகின்றன. மக்கள் வேலைகளை இழந்துவிட்டனர். தொழிலாளர்களுக்கு கூலி கிடைப்பதில்லை. கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் பலியானதும், உடல்கள் ஆறுகளில் வீசப்பட்டதும், ஒவ்வொரு குடும்பமும் தொற்றால் அவதிப்படுவதும் வேதனை அளிக்கிறது. ஆனால் அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story