டெல்லியில் அமையும் திமுக கட்சி அலுவலகம் - கட்டுமான பணிகள் தீவிரம்


டெல்லியில் அமையும் திமுக கட்சி அலுவலகம் - கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:33 AM GMT (Updated: 15 Jun 2021 11:33 AM GMT)

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது.

அதன்படி நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 15 எம்.பி.க்கள் வரை உள்ள கட்சிகளுக்கு 500 சதுர மீட்டரும், 25 எம்.பி.க்கள் வரை உள்ள கட்சிகளுக்கு 1,000 சதுர மீட்டரும், 50 எம்.பி.க்கள் வரை உள்ள கட்சிகளுக்கு 2,000 சதுர மீட்டரும், 100 எம்.பி.க்கள் வரை உள்ள கட்சிகளுக்கு ஒரு ஏக்கரும், 200 எம்.பி.க்கள் வரை உள்ள கட்சிகளுக்கு 2 ஏக்கரும், 200க்கும் மேல் உள்ள கட்சிகளுக்கு 4 ஏக்கர் நிலமும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுக கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013 ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர், முதன்முறையாக நாளை டெல்லி செல்ல இருக்கும் மு.க.ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story