காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்


காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:01 PM GMT (Updated: 2021-06-21T19:31:25+05:30)

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஷைனப்புரா பகுதியில் உள்ள பாபாபுரா என்ற கிராமத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இன்று மாலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் பயங்ரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாபாபுரா பகுதியை சுற்றுவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி முதாசீர் உள்பட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story