முதியவர் தாக்கப்பட்ட விவகாரம்: 'டுவிட்டர் இந்தியா’ நிறுவன இயக்குனர் நேரில் ஆஜராக போலீசார் நோட்டீஸ்

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘டுவிட்டர் இந்தியா’ நிறுவன இயக்குனர் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காசியாபாத் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி என்ற பகுதியில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சஃபி அப்துல் சமத் என்ற முதியவர் 5-க்கும் மேற்பட்ட நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
முதியவர் தாக்கப்படுவது போன்ற வீடியோ டுவிட்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், சஃபிரை தாக்கிய நபர்கள் அவரை ’ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் சஃபிரின் தாடியை மழித்ததாகவும் டுவிட்டர் வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டது. பல்வேறு கட்சியினர், திரைப்படத்துறையினர் மற்றும் பல செய்தி நிறுவனங்களால் அந்த வீடியோ பகிரப்பட்டது.
ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் சஃபி அப்துல் சமத் மீது மதரீதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. சஃபி அப்துல் மாந்திரிக செயல்களில் ஈடுபடக்கூடிவர் எனவும், தனது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி அதை போக்க உதவுமாறு சஃபிரிடம் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு மாந்திரிக (தாயத்து) டாலர் ஒன்றை கொடுத்த சஃபிர் குடும்ப பிரச்சினை குணமாகிவிடும் என கூறியுள்ளார்.
ஆனால், எதிர்பார்த்ததுபோல் பிரச்சினை சரியாகாததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சஃபி அப்துல் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 6 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்து மற்றும் முஸ்லீம் என இரு மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்தே சஃபி அப்துல் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், முதியவர் தாக்கப்படும் வீடியோ மத ரீதியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலியாக கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும், அதை உடனடியாக நீக்குமாறும் மத்திய, மாநில அரசு தரப்பில் டுவிட்டரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வீடியோவை டுவிட்டர் நீக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வகையில், முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாக தவறான பரப்பியதாகவும், தவறான மற்றும் போலித்தகவல் பரவுவதை தடுக்கவில்லை எனவும் டுவிட்டர் இந்தியா நிறுவனம் மீது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி பார்டர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குத்தொடர்பான விசாரணைக்கு வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ’டுவிட்டர் இந்தியா’ நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரிக்கு லோனி பார்டர் போலீசார் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
24-ம் தேதி லோனி பார்டர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகவில்லை என்றால் அது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மனீஷ் மகேஷ்வரிக்கு லோனி பாடர் போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story