காங்கிரஸ் இன்றி பா.ஜனதாவுக்கு எதிரான அணி அமையாது: நானா படோலே


காங்கிரஸ் இன்றி பா.ஜனதாவுக்கு எதிரான அணி அமையாது: நானா படோலே
x
தினத்தந்தி 22 Jun 2021 3:08 PM GMT (Updated: 2021-06-22T20:38:29+05:30)

காங்கிரஸ் இன்றி பா.ஜனதாவுக்கு எதிரான அணி அமையாது என்று நானா படோலே கூறியுள்ளார்.

சாத்தியம் இல்லை

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக 3-வது அணி அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் இன்றி பா.ஜனாவுக்கு எதிரான அணியை அமைக்க முடியாது. இதற்கான சாத்திய கூறுகள் இல்லை" என்றார்.

வாழ்த்துகள்

மேலும் மராட்டியத்தில் வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று நானா படோலே கூறி வருகிறார். இந்த சமயத்தில் தேர்தல் பற்றி பேசினால் மக்கள் நம்மை செருப்பால் அடிப்பார்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பகிரங்கமாக நானா படோலேயை எச்சரித்தார். அதே வேளையில் நீங்கள் தனித்து போட்டியிட்டால், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்தார். .

இதற்கு பதிலளித்த நானா படோலே, வரும் தேர்தல்களில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று பதிலளித்தார்.


Next Story