கொச்சி கடற்படை தளம்: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராஜ்நாத்சிங் வருகை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jun 2021 2:13 AM IST (Updated: 23 Jun 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

கொச்சி கடற்படை தளத்தில் வரும் 25-ந்தேதி விமானம் தாங்கி கப்பலை, ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பார்வையிடுகிறார்.

கொச்சி, 

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய கடற்படைக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 

இதன் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், 2 நாட்கள் அவர் சுற்றுப்பயணமாக கொச்சி வருகிறார். நாளையும் (24-ந்தேதி), நாளை மறுதினமும் (25-ந்தேதி) அவர் கப்பல் பணிகளை ஆய்வு செய்கிறார். இந்த கப்பலின் ஆரம்ப கட்ட சோதனைகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே முடிந்துவிட்டது. கொரோனா 2-வது அலையால் இந்த கப்பலை கடலில் சோதனை ஓட்டம் செய்வது தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்னர் ராணுவ மந்திரி தற்போது பார்வையிட உள்ளார். கடலிலும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், இந்த கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுவிடும்.

“இந்த கப்பல் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும். இதில் உள்ள 75 சதவீதத்திற்கு மேற்பட்ட உபகரணங்கள் இந்தியாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்டவையாகும். 50-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல் தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சியுடன் தேர்ந்த தயாரிப்பாக இந்த கப்பல் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் தயாரிப்பில் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த கப்பல் தயாரிப்புக்காக சுமார் 20 ஆயிரம் கோடி இந்திய அரசால் ஒதுக்கப்பட்டது” என்று கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story