காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை - பரூக் அப்துல்லா


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை - பரூக் அப்துல்லா
x
தினத்தந்தி 24 Jun 2021 3:35 PM GMT (Updated: 24 Jun 2021 3:35 PM GMT)

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. 

இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி கலந்து கொண்டன. சுமார் 4 மணி நேரம் நீடித்த தற்போது நிறைவடைந்துள்ளது.

கூட்டத்திற்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

2019 ஆகஸ்ட் 15-ம் தேதி செய்த (காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து) நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று பிரதமரிடம் நாங்கள் கூறினோம். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. ஆனால், சட்டத்தை நாங்கள் கையில் எடுக்கமாட்டோம். இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம். மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான நம்பிக்கை முறிவடைந்துள்ளதாக பிரதமரிடம் நாங்கள் கூறினோம். அதை பூர்த்திசெய்வது மத்திய அரசின் கடமை.

எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும், ஆனால் ஜம்மு-காஷ்மீர் நலனுக்காக சில முடிவுகளை மாற்றியமைப்பது அவசியம் எனவும் பிரதமரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன்பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதை விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்தையே மக்கள் விரும்புகின்றனர்.  

ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தலுக்கான வேலைகள் மற்றும் மாநில அந்தஸ்து தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி கூறினர். 

முதலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கப்பட வேண்டும், அதன்பின்னர் தான் தேர்தல் நடைபெற வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்’ என்று உமர் அப்துல்லா தெரிவித்தார். 

Next Story