ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலிமைபடுத்துவதே நமது நோக்கம் - பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலிமைபடுத்துவதே நமது நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதற்கிடையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கலந்து கொண்டன. சுமார் 4 மணி நேரம் நீடித்த தற்போது நிறைவடைந்துள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் குப்கர் கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நிச்சயம் கொண்டு வருவோம் என்று மெகபூபா முப்தி கூறுகிறார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்று பரூக் அப்துல்லா கூறினார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, பண்டிட்களுக்கு மறுவாழ்வு உள்ளிட்ட 5 கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், காஷ்மீர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடனான இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலிமைபடுத்துவதே நமது நோக்கம். ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறை பணிகள் விரைவில் நடைபெற வேண்டும். அப்போழுதுதான் அங்கு தேர்தல் நடைபெற்று ஜம்மு-காஷ்மீரில் தேர்தெடுக்கப்பட்டு அரசு அமைந்து அது ஜம்மு-காஷ்மீருக்கான வளர்ச்சிப்பாதையை வலிமைபடுத்தும்.
ஒரு மேஜையில் அமர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதே நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் தலைமையை வழங்கும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் குறிப்பாக இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களிடம் நான் கூறினேன்’ என தெரிவித்தார்.
Related Tags :
Next Story