பொய் குற்றச்சாட்டுகளை கூறி மகா விகாஸ் அகாடி அரசை வீழ்த்த முடியாது: சஞ்சய் ராவத்


பொய் குற்றச்சாட்டுகளை கூறி மகா விகாஸ் அகாடி அரசை வீழ்த்த முடியாது: சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 2 July 2021 1:17 AM IST (Updated: 2 July 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மகா விகாஸ் அகாடி அரசை வீழ்த்த முடியாது என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

சி.பி.ஐ. விசாரணை
மராட்டியத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் மந்திரி அனில் பரப் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சியான பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் டெல்லி சென்றுள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி அளித்தார்.

பலவீனப்படுத்த முடியாது...
அப்போது பா.ஜனதாவின் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், “மத்திய விஸ்டா திட்டத்திற்கு டெல்லியில் போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மராட்டிய அரசின் பாதையை மாற்ற முடியாது என்பதை பா.ஜனதா அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.ஊழல் குற்றச்சாட்டு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி 
மகாவிகாஸ் அகாடி அரசை சீர்குலைக்க முடியும், பலவீனப்படுத்த முடியும் என்று பா.ஜனதா நினைத்தால் அது தவறு.சட்டமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் மத்திய அமைப்புகளின் உதவியுடன் பொய்யான வழக்குகளில் சிக்க வைப்பதன் மூலம் எங்கள் அரசை பலவீனப்படுத்த முடியாது” என்றார்.

கூட்டணி வலுவடைந்தது
மேலும் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள் குறித்து எழுந்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியுடன், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்புக்கு பின்பு மகா விகாஸ் அகாடி கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது.இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இடையிலான சந்திப்பின் போது எங்கள் மீது எழும் தவறான குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடுவது, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.மேலும் மகாவிகாஸ் அகாடி அரசை மகாபாரதத்தின் பாண்டவர்களுடன் ஒப்பிட்ட அவர், “பாண்டவர்கள் கிருஷ்ணரால் வழிநடத்தப்பட்டு சத்தியத்திற்காக நின்றனர். அதேநேரம் கவுரவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற எந்த பொய்யையும் முன்வைக்க தயங்காதவர்கள்” என்றார்.

சட்டசபை சபாநாயகர் தேர்தல் குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி எழுதிய கடிதம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “சபாநாயகர் நியமனம் குறித்து கவலைப்படும் கவர்னர், 12 எம்.எல்.சி.க்களை நியமிக்கும் கோப்பில் கையெழுத்திட ஏன் மறந்துவி்ட்டார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.

Next Story