ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை- காங்கிரஸ் வலியுறுத்தல்


ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை-  காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2021 7:54 AM IST (Updated: 4 July 2021 7:54 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே புகார் கூறி வருகிறது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரான்சிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு கிளம்பி இருந்தது. தற்போது இந்த புகார்கள் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு பிரெஞ்சு அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்துடன் தொடர்புடையது என்பதால், ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் இதற்கு ஒரே வழி என்று கூறிய சுர்ஜேவாலா, இதில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Next Story