செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கருத்து


செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 8 July 2021 12:06 AM GMT (Updated: 8 July 2021 12:06 AM GMT)

செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால், பிரதமர் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

கட்சி மாறி வந்தவர்கள்
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரிசபை விரிவாக்கம், செயல்திறன் அடிப்படையிலோ, நிர்வாகம் அடிப்படையிலோ செய்யப்படவில்லை. அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்காகவும், கட்சி மாறி வந்தவர்களை திருப்திப்படுத்தவும் செய்யப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தத்தில், அவர்களது கூட்டாளிகள் நலனுக்காக மந்திரிசபையை விஸ்தரித்துள்ளனர். நாட்டு நலனுக்காக செய்யவில்லை.

நீக்கி இருக்க வேண்டும்
அதே சமயத்தில், பிரதமர் மோடியின் செயல்திறன் எப்போது மதிப்பிடப்படும்? அவர் கொரோனா காலத்தில் பொறுப்பை தட்டிக்கழித்து நாட்டை வறுமையின் விளிம்புக்கு தள்ளியவர். செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால், பிரதமர் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும்.அதுபோல், சீனாவுடனான எல்லை மோதலை சிறப்பாக கையாள தவறியதற்காக ராஜ்நாத்சிங்கும், நக்சலைட், பயங்கரவாத பிரச்சினைகள், கும்பல் வன்முறைகள் நீடிப்பதால் அமித்ஷாவும், மோசமான பொருளாதார நிலைமைக்காக நிர்மலா சீதாராமனும் நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

சர்வாதிகாரி
முன்னேற்றம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளன. இந்திய பொருளாதாரத்தை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்துக்கு வழி வகுத்தவர் மோடி.
21-ம் நூற்றாண்டின் சூப்பர் பவரான இந்தியாவின் வலிமையை குழிதோண்டி புதைத்தவர். அவர் சர்வாதிகாரியாகவே எப்போதும் நினைவுகூரப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story