மத்திய அரசு-டுவிட்டர் மோதல் விவகாரம்: இந்தியாவில் பணிபுரிபவர்கள் நாட்டின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மந்திரி

மத்திய அரசுடன் டுவிட்டர் நிறுவனம் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் வசிப்பவர்களும், பணி புரிபவர்களும் நாட்டின் விதிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துறைக்கான புதிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தொடர்பாக, மத்திய அரசு கடந்த மே 26-ந்தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அமல்படுத்தி உள்ளது.இதில் முக்கியமாக, மேற்படி சமூக வலைத்தளங்கள் தங்களின் இந்திய கிளைக்கு, தலைைம இணக்க அதிகாரி, பொறுப்பு அதிகாரி மற்றும் குறைதீர்ப்பு அதிகாரி என 3 அதிகாரிகளை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும். இவர்கள் மூவரும் இந்தியர்களாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
அமைப்பு செயலாளருடன் சந்திப்பு
இந்தநிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு புதிய மந்திரியாக அஸ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டு உள்ளார். நேற்று தனது பொறுப்புகளை ஏற்றுக்ெகாண்ட அவர், பின்னர் பா.ஜனதா அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோசை சந்தித்து பேசினார்.பின்னர் வெளியே வந்த அவரிடம், டுவிட்டர் நிறுவன மோதல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்தியாவில் வசிக்கும் மற்றும் பணி செய்யும் எவரும் நாட்டின் விதிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும்’ என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு நன்றி
வரிசையில் நிற்கும் கடைசி நபரின் வாழ்வு மேம்பாட்டிலேயே தனது கவனம் இருக்கும் எனக்கூறிய வைஷ்ணவ், தனக்கு இந்த பொறுப்புகளை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.ஒடிசாவை சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவிடம் ரெயில்வே துறையும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story