கர்நாடகத்தில் 9 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும்: முதல்-மந்திரி எடியூரப்பா


கர்நாடகத்தில் 9 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும்: முதல்-மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 9 July 2021 7:43 AM IST (Updated: 9 July 2021 7:43 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

9 லட்சம் வீடுகள்
வீட்டு வசதித்துறை திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் பல்வேறு வீட்டு வசதி திட்டங்களின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும். இதில் மாநில அரசின் திட்டங்களில் 5 லட்சம் வீடுகளும், மத்திய அரசின் திட்டங்களில் 4 லட்சம் வீடுகளும் கட்டப்படுகின்றன. மத்திய-மாநில அரசுகளின் வீட்டு வசதி திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்ட மானியமாக ரூ.1.75 லட்சமும், பிற சமூகத்தினருக்கு ரூ.1.20 லட்சமும் வழங்கப்படுகிறது.

ரூ.6,200 கோடி நிதி
மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்குகிறது. கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா 100 வீடுகள் ஒதுக்கப்படும். மாநில அரசு சார்பில் பசவ வீட்டு வசதி திட்டம், டாக்டர் அம்பேத்கர் வீட்டு வசதி திட்டம், தேவராஜ் அர்ஸ் வீட்டு வசதி திட்டம், வாஜ்பாய் நகர வீட்டு வசதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் இந்த வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ.6,200 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி படிப்படியாக ஒதுக்கப்படும்.பெங்களூருவில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 
இதில் முதல் கட்டமாக 5 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story