பங்கஜா முண்டே அரசியல் வாழ்க்கையை முடிக்கவே பகவத் காரத்திற்கு மத்திய மந்திரி பதவி: சிவசேனா


பங்கஜா முண்டே அரசியல் வாழ்க்கையை முடிக்கவே பகவத் காரத்திற்கு மத்திய மந்திரி பதவி: சிவசேனா
x
தினத்தந்தி 9 July 2021 10:58 PM GMT (Updated: 9 July 2021 10:58 PM GMT)

பங்கஜா முண்டேவின் அரசியல் வாழ்க்கையை முடிக்கவே பகவத் காரத்திற்கு மத்திய மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.

மந்திரி பதவி கிடைக்கவில்லை
கடந்த புதன்கிழமை நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் 43 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் மறைந்த பா.ஜனதா தலைவரான கோபிநாத் முண்டேவின் மகளான பீட் நாடாளுமன்ற உறுப்பினர் பீரித்தம் முண்டேவுக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் பிரீத்தம் முண்டே மற்றும் அவரது சகோதரியும், மாநில முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் வாழ்க்கையை முடிக்க...
பகவத் காரத் மத்திய இணை மந்திரியாக ஆக்கப்பட்டுள்ளார். பங்கஜா முண்டேவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவின் நிழலில் தான் பகவத் காரத் வளர்ந்தார். இந்தநிலையில் பீரித்தம் முண்டேவுக்கு பதிலாக பகவத் காரத் மந்திரியாக்கப்பட்டு உள்ளார். வன்ஜாரா சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்ற பாரதி பவார், கபில் பாட்டீலுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கப்பட்டு இருப்பதும் பா.ஜனதா விசுவாசிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் ராவத் கருத்து
இதேபோல மத்திய மந்திரி சபையை நிரப்ப ஆள்கொடுத்ததற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு பா.ஜனதா நன்றி கூறவேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மராட்டியத்தில் இருந்து மத்திய மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ள 4 பேரில் 3 பேர் பா.ஜனதா பின்னணியை சேர்ந்தவர்கள் கிடையாது. கபில் பாட்டீல், பாரதி பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து சென்றவர்கள். நாராயண் ரானே சிவசேனா, காங்கிரசில் இருந்து சென்றவர்" என்றார்.

Next Story