அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு அறிவுரை; டெல்லி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்


அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு அறிவுரை; டெல்லி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 11 July 2021 4:52 AM IST (Updated: 11 July 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

நாடுதழுவிய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டு இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

மூன்றாவது அலையை தடுக்க முடியாது
டெல்லியில், கடந்த மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், சந்தைகளில் மக்கள் பெருமளவில் திரண்டனர். இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களை டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஒருவர், ‘வாட்ஸ்அப்’ மூலம் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.அதன் அடிப்படையில், டெல்லி ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், மூன்றாவது அலை வருவதை தடுக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசு அறிக்கை

இந்தநிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், மத்திய அரசு நேற்று களநிலவர அறிக்கையை வக்கீல் அனில்சோனி மூலம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.. அதில், மத்திய அரசு கூறியிருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, வீட்டில் இருந்து பணிபுரிதல், பணி நேரத்தை குறைத்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற நாடுதழுவிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதியது. அதில், ஜூலை 31-ந் தேதி வரை, மேற்கண்ட நாடுதழுவிய விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளோம்.

பேரிடர் மேலாண்மை சட்டம்
இதுதவிர, கள நிலவரத்துக்கு ஏற்ப மாநிலங்கள் சுதந்திரமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளோம். கொரோனா பரவல் குறைந்தவுடன், பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிப்பது அவசியம்தான். ஆனால், எல்லாவற்றையும் கவனத்துடன் அணுக வேண்டும். பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தல் ஆகிய 5 அம்ச வியூகத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கள நிலவரத்தை பொறுத்துத்தான், கட்டுப்பாடுகளை விதிக்கவோ, தளர்வுகளை அறிவிக்கவோ வேண்டும் என்று மாநிலங்களிடம் கூறியுள்ளோம்.

இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story