ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலீபான்கள் ஆதிக்கம்: காந்தஹாரில் இருந்து இந்திய தூதரகத்தினர் வெளியேற்றம்


ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலீபான்கள் ஆதிக்கம்: காந்தஹாரில் இருந்து இந்திய தூதரகத்தினர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 12 July 2021 4:17 AM IST (Updated: 12 July 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி வருவதால், காந்தஹாரில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு, சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர்.

அமெரிக்க படைகள் வாபஸ்
அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் ஆகியவற்றின் மீது பின்லேடன் ஆதரவு அல் கொய்தா பயங்கரவாதிகள் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இது உலக வரலாற்றின் கரும்புள்ளியாக அமைந்தது.இந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் தலீபான்கள் மீது அமெரிக்கா, மறு மாதமே (2001 அக்டோபர்) அதிரடியாக போர் தொடுத்தது. தலீபான்கள் ஆட்சியை ஒழித்துக்கட்டி, 
மக்களாட்சியை மலரச்செய்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கே இருந்து தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு உள்நாட்டுப்படைகளுக்கு வலது கரமாக விளங்கி வந்தன.இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் திரும்பப்பெறப்படும் என அறிவித்துள்ளார்.

தலீபான்கள் மீண்டும் ஆதிக்கம்
இந்த நிலையில் அங்கு தலீபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கி உள்ளனர். பல்வேறு நகரங்களில் அவர்கள் கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்துகின்றனர்.காந்தஹார் நகரின் முக்கிய பகுதிகளை அவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். இது கவலை அளிக்கிற அம்சமாக மாறி இருக்கிறது.

இந்திய தூதரகத்தினர் வெளியேற்றம்
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களையொட்டி அந்த நகரின் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோதிபெத் போலீஸ் படையினர் என சுமார் 50 பேரை இந்தியா அவசரமாக வெளியேற்றியது.இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றை நேற்று முன்தினம் காந்தஹாருக்கு அனுப்பியது. அந்த விமானம் மூலம் காந்தஹார் தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த அந்த 50 பேரும் நாடு திரும்பினர்.

தூதரகம் மூடலா?

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-

காந்தஹார் நகரம் அருகே சண்டை வலுத்துள்ளதால், தற்போதைக்கு அங்குள்ள இந்திய துணைத்தூதரகத்தில் பணியில் இருந்த தூதரக அதிகாரிகள், போலீஸ் படையினர் திரும்ப அழைத்து வரப்பட்டனர். இது தற்காலிக நடவடிக்கைதான். உள்ளூர் பணியாளர்களை கொண்டு காந்தஹார் தூதரகம் தொடர்ந்து செயல்படும்.ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு நிலைமையை இந்தியா கூர்ந்து கண்காணிக்கிறது. நமது பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். காந்தஹார் துணைத்தூதரகம் மூடப்பட்டு விட வில்லை.நிலைமை சீராகும் வரையில் இது தற்காலிக நடவடிக்கை என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன். விசாக்கள் வழங்கும் பணி தொடரும். காபூலில் உள்ள தூதரகம் மூலம் தூதரக ரீதியிலான சேவைகளும் நடைபெறும்.ஆப்கானிஸ்தானின் முக்கிய கூட்டாளியான இந்தியா, அமைதியான, இறையாண்மைமிக்க, ஜனநாயகரீதியிலான ஆப்கானிஸ்தானுக்கு உறுதியாக உள்ளது.காபூலில் உள்ள இந்திய தூதரகமும், காந்தஹார் மற்றும் மஷார் இ ஷெரீப் நகரங்களில் உள்ள துணைத்தூதரகங்களும் மூடப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story