மத்திய கூட்டுறவு துறை அமைச்சகத்தால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை: சரத்பவார்

மத்திய கூட்டுறவு துறை அமைச்சகத்தால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை என சரத்பவார் கூறியுள்ளார்.
மத்தியில் புதிய அமைச்சகம்
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் கூட்டுறவு துறை இயங்கி வந்தது. தற்போது மத்திய அரசு கூட்டுறவு துறையை தனியாக பிரித்து தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கூட்டுறவு அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கூட்டுறவு துறை தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளதால், கூட்டுறவில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு துறை, மத்திய அரசின் வசம் சென்றுவிடும் எனவும் கூறப்படுகிறது.
பாதிப்பில்லை
இந்தநிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய வேளாண்துறை மந்திரியுமான சரத்பவார் மறுத்து உள்ளார். மேலும் அவர் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தால், மராட்டியத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியல் அமைப்பின்படி ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு அமைப்புகள் அந்த மாநிலத்திற்கு கீழ் தான் வரும். மத்திய கூட்டுறவு அமைச்சகம் பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் தொடர்புடையது. ஒரு மாநிலத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. எனவே அதுபோன்ற கூட்டுறவு நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தும். இது புதிய முடிவு இல்லை. நான் மத்திய அரசில் இருந்த போதே முடிவு செய்யப்பட்டது தான். ஆனால் அப்போது துரதிருஷ்டவசமாக மத்திய கூட்டுறவு துறை, கூட்டுறவு நிறுவனங்களை கைப்பற்றிவிடும் அல்ல அதன் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என ஊடகங்கள் தவறான தகவலை கூறுகின்றன’’ என்றார்.
Related Tags :
Next Story