பீகார்: விஷ சாராயம் குடித்த 16 பேர் பலி; 16 பேர் கைது

பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் 16 பேர் பலியான சம்பவத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாட்னா,
பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் லாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சிலர் விஷ சாராயம் குடித்துள்ளனர் என கூறப்படுகிறது. இதில் நேற்று 8 பேர் உயிரிழந்தனர். பலர் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக இன்று உயர்ந்து உள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி அதன் முடிவாக 5 பேரை கைது செய்துள்ளனர். எப்.ஐ.ஆர். பதிவு செய்து தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரோ அல்லது கிராமத்தினரோ விஷ சாராயம் குடித்தது பற்றி தெரிவிக்கவில்லை.
இந்த விசாரணை பற்றிய விவரங்கள் துணை முதல் மந்திரி ரேணு தேவியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி ரேணு தேவி கூறும்போது, விசாரணை நடந்து வருகிறது. தொடர்புடைய அதிகாரிகள் அதற்காக பணியாற்றி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் எதுவும் பேச முன்வரவில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கவனித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பெட்டையா நகரில் உள்ள மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல் நிலைய அதிகாரி உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story