கொட்டித்தீர்த்த கனமழை; மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது

தொடச்சியாக பெய்த கனமழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது.
மும்பை,
மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் நேற்று காலை 8.30 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மும்பை புறநகரில் 23.5 செ.மீ. மழையும், நகர்பகுதியில் 19.7 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இடைவிடாமல் பெய்த இந்த மழையே வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்தது.
இந்த கனமழையால் நேற்று காலை மும்பைக்கு குடிநீர் வழங்கும் விகார் ஏரி நிரம்பியது. இந்த ஏரி நிரம்பி உள்ளதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த ஏரி கடந்த 1859-ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், தினமும் 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் மும்பைக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story