மும்பையில் கடற்படை தளத்தை சுற்றி ட்ரோன் பறக்கவிட தடை

மும்பையில் கடற்படை தளத்தை சுற்றி 3 கி.மீ.க்கு ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி பயங்கரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமானப்படை மற்றும் கடற்படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையில் கடற்படை தளங்களை சுற்றி 3 கி.மீ.க்கு ட்ரோன்கள் அல்லது ஆள் இல்லாத குட்டி விமானங்களை பறக்கவிட கடற்படை தடை விதித்து உள்ளது. இதுகுறித்து கடற்படை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மும்பையில் உள்ள கடற்படை தளங்களை சுற்றி உள்ள 3 கி.மீ. பகுதிகள் “நோ ஃபிளை சோன்” ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே கடற்படை தளத்தை சுற்றி ட்ரோன் அல்லது குட்டிவிமானங்கள் பறக்கவிட விரும்புவோர் அதற்காக முன் கூட்டியே விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் அதுகுறித்த கடிதத்தை சம்பந்தப்பட்ட நபர் ஒரு வாரத்திற்கு முன் மேற்கு மண்டல கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
முன் அனுமதி இன்றி பறக்கவிடப்படும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தவோ அல்லது பறிமுதல் செய்யவோ கடற்படைக்கு அதிகாரம் உள்ளது. இதேபோல உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனி நபர் அல்லது அரசு ஏஜென்சிகள் கடற்படை தளத்தை சுற்றி ட்ரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story