பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய மந்திரி அறிக்கையை கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி


பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய மந்திரி அறிக்கையை கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
x
தினத்தந்தி 22 July 2021 10:33 AM GMT (Updated: 22 July 2021 10:33 AM GMT)

மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது; மக்களவை கடைசியாக மாலை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது.  இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.

 இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கியது. இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும்  எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
மாநிலங்களவையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி  அஸ்வினி வைஷ்ணவ்  பெகாசஸ் உளவு விவகாரம்  தொடர்பான அறிக்கையை வாசிக்க எழுந்தவுடன் திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் எழுந்து ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பக்கம் பறக்கவிட்டார். ஆவணங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டதால், மந்திரி தனது அறிக்கையை படிக்க முடியவில்லை, அதற்கு பதிலாக அதன் நகலை சபையின் மேசையில் வைத்தார்.

இதை தொடர்ந்து  மாநிலங்களவை மூன்றாவது முறையாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை" என்று மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ராஷ்டிர ஜனதா தள எம்.பி மனோஜ் ஜா ஐ.டி. மந்திரியின் அணுகுமுறை "துரதிர்ஷ்டவசமானது" என கூறினார்."சலசலப்புக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்ப மந்திரி ஒரு அறிக்கையை வெளியிட்ட விதம், இந்த பிரச்சினையை கேலி செய்ய மட்டுமே அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது என ஜா கூறினார்.

மக்களவையும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது, கடைசியாக மாலை 4 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story