டீசலுக்கு ராஜஸ்தானில் அதிக வரிவிதிப்பு; பெட்ரோலுக்கு அதிகமான ‘வாட்’ வரி விதிப்பது மத்தியபிரதேசம்: பெட்ரோலிய மந்திரி


டீசலுக்கு ராஜஸ்தானில் அதிக வரிவிதிப்பு; பெட்ரோலுக்கு அதிகமான ‘வாட்’ வரி விதிப்பது மத்தியபிரதேசம்: பெட்ரோலிய மந்திரி
x
தினத்தந்தி 27 July 2021 12:14 AM IST (Updated: 27 July 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே மத்தியபிரதேசத்தில்தான் பெட்ரோல் மீது அதிகமான ‘வாட்’ வரி விதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. டீசலுக்கு ராஜஸ்தானில் அதிக வரி விதிக்கப்படுகிறது.

மத்திய அரசுக்கு வருவாய்
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். 

அவர் கூறியதாவது:-

பெட்ரோல் சில்லரை விலையில் 55 சதவீதம், மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக செல்கிறது. டீசல் விலையில் 50 சதவீதம் வரியாக செல்கிறது.மத்திய அரசு பெட்ரோல் மீது கலால் வரியாக லிட்டருக்கு ரூ.32.90-ம், டீசல் மீது கலால் வரியாக ரூ.31.80-ம் வசூலிக்கிறது.கடந்த நிதியாண்டில், மத்திய அரசுக்கு இந்த வரிவிதிப்பு மூலம் பெட்ரோலில் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 598 கோடி வருவாயும், டீசலில் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 296 கோடி வருவாயும் கிடைத்தது. பெட்ரோல், டீசல் அடக்கவிலை, மத்திய அரசின் வரி ஆகியவற்றின் மொத்த தொகை மீது மாநில அரசுகள் ‘வாட்’ (மதிப்பு கூட்டுவரி) வரி விதிக்கின்றன. நாட்டிலேயே அந்தமானில்தான் வாட் வரி குறைவாக இருக்கிறது. அங்கு பெட்ரோலுக்கு ரூ.4.82-ம், டீசலுக்கு ரூ.4.74-ம் வாட் வரியாக விதிக்கப்படுகிறது.

மத்தியபிரதேசம்
நாட்டிலேயே மத்தியபிரதேசத்தில்தான் பெட்ரோலுக்கு அதிகமான வாட் வரி விதிக்கப்படுகிறது. அங்கு லிட்டருக்கு ரூ.31.55 வரியாக விதிக்கப்படுகிறது. டீசலை பொறுத்தவரை ராஜஸ்தானில் அதிகமான வாட் வரி (லிட்டருக்கு ரூ.29.88) விதிக்கப்படுகிறது. மராட்டியத்தில் ரூ.29.55 விதிக்கப்படுகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.54 என்றால், அதில் ரூ.32.90 மத்திய வரிக்கும், ரூ.23.43 மாநில வரிக்கும் செல்கிறது. டீசல் விலை ரூ.89.87 என்றால், மத்திய வரிக்கு ரூ.31.80-ம், மாநில வரிக்கு ரூ.13.14-ம் செல்கிறது.இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சரிவு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், கடந்த ஆண்டு மாநிலங்கள் பெருமளவில் ஆதாயம் அடைந்தன. ஆந்திர அரசு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.7.59 வீதமும், டீசலில் லிட்டருக்கு ரூ.5.48 வீதமும் ஆதாயம் அடைந்தது. தெலுங்கானா, பெட்ரோலில் ரூ.5.77 வீதமும், டீசலில் ரூ.4.08 வீதமும் பலன் பெற்றது.மொத்த வருவாயில் பல மாநிலங்கள் முந்தைய ஆண்டை விட அதிகமான ‘வாட்’ வரி வருவாய் ஈட்டின. உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தின் வாட் வருவாய், முந்தைய ஆண்டை விட ரூ.1,800 கோடி அதிகமாக இருந்தது. மத்தியபிரதேசத்தின் வாட் வருவாய், ரூ.1,188 கோடி அதிகரித்தது. ஆந்திராவின் வாட் வருவாய், ரூ.846 கோடியும், உத்தரபிரதேசத்தின் வாட் வருவாய் ரூ.1,844 கோடியும் அதிகரித்தது.ஆனால், தமிழ்நாட்டின் ‘வாட்’ வரி வருவாய், முந்தைய ஆண்டை விட ரூ.1,112 கோடி வீழ்ச்சி அடைந்தது. அதுபோல், டெல்லியின் வாட் வருவாய் ரூ.1,180 கோடியும், மராட்டிய மாநிலத்தின் வாட் வருவாய் ரூ.1,361 கோடியும் சரிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story