அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம் நீடிப்பு; 6 போலீசார் கொல்லப்பட்டதற்கு அசாமில் 3 நாள் துக்கம்


அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம் நீடிப்பு; 6 போலீசார் கொல்லப்பட்டதற்கு அசாமில் 3 நாள் துக்கம்
x
தினத்தந்தி 27 July 2021 6:27 PM GMT (Updated: 27 July 2021 6:27 PM GMT)

மிசோரம் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 6 அசாம் போலீசார் பலியானதற்கு அசாமில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மிசோரம் போலீசார் மீது வழக்கு தொடர போவதாக அசாம் சிறப்பு போலீஸ் டி.ஜி.பி. கூறினார்.

எல்லை தகராறு
அசாம் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இருந்த மிசோரம், கடந்த 1971-ம் ஆண்டு தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. ஆனால், எல்லையை சரியாக வரையறுக்கவில்லை.இதனால், இரு மாநில எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களிடையே அடிக்கடி தகராறு நடந்து வருகிறது. வீடுகளுக்கு தீவைப்பது, ஆக்கிரமிப்பு என்று தொடர்ந்து நடக்கிறது. இதுதொடர்பாக இரு மாநில அரசுகளுக்கிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதற்கிடையே, அசாமின் ரேங்டி பஸ்திக்கு செல்லும் வழியில் மிசோரம் ஒரு சாலையை அமைத்து வருவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இதுகுறித்து மிசோரமுடன் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்காக நேற்று முன்தினம் அசாம் போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி., கச்சார் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் எல்லை பகுதிக்கு சென்றனர்.

6 பேர் பலி
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே மிசோரமை சேர்ந்த மர்ம நபர்கள், அசாம் அதிகாரிகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில், கலெக்டரின் கார் உள்பட 3 கார்கள் சேதமடைந்தன.மேலும், மிசோரம் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இந்த களேபரத்தில், அசாம் போலீஸ் ஐ.ஜி. காயமடைந்தார்.பின்னர், மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அசாம் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மிசோரம் போலீசார், சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில், அசாம் போலீசார் 6 பேர் பலியானார்கள். போலீஸ் சூப்பிரண்டு, பொதுமக்கள் உள்பட 60 பேர் காயமடைந்தனர்.இதனால் எழுந்த பதற்றத்தை தொடர்ந்து, இரு மாநில முதல்-மந்திரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசி, அமைதியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

சாலை முடக்கம்
இந்தநிலையில், அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம் நீடித்தது. எல்லைப்பகுதியில் உள்ள கபுகஞ்ச், டோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த அசாம் மக்கள், மிசோரமுக்கு செல்லும் சாலையை காலவரையின்றி முடக்கும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மிசோரமுக்கு எந்த வாகனங்களும் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இதுபோல், வேறு சில கிராமங்களில் இன்று முதல் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.6 போலீசார் கொலையை கண்டித்து, அசாம் மாநில அரசு நேற்று முதல் 3 நாள் துக்கம் கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க 
விடப்பட்டன. கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.

வழக்கு
அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, சில்சார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சில்சார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பலியான 6 போலீசார் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.போலீஸ் சூப்பிரண்டு, மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார். 6 போலீசார் கொல்லப்பட்டதற்காக, மிசோரம் போலீசார் மீது வழக்கு தொடரப்போவதாக அசாம் சிறப்பு டி.ஜி.பி. ஜி.பி.சிங் தெரிவித்தார்.

திரிபுராவிலும் மோதல்
அசாம்-மிசோரம் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், திரிபுரா-மிசோரம் எல்லைப் பகுதியிலும் இரு மாநிலத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பலர் படுகாயம் அடைந்தனர். வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.

Next Story