வி.ஐ.பி.க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்: சரத்பவார்


வி.ஐ.பி.க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்: சரத்பவார்
x
தினத்தந்தி 27 July 2021 7:49 PM GMT (Updated: 27 July 2021 7:49 PM GMT)

வி.ஐ.பி.க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

வி.ஐ.பி.க்கள் தவிர்க்க வேண்டும்
மராட்டியத்தில் பலத்த மழை காரணமாக கடந்த வாரம் ரத்னகிரி, ராய்காட், கோலாப்பூர், சத்தாரா, சாங்கிரி, தானே, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கு பெரும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டு உள்ளது.கடந்த சில நாட்களாக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர்கள், மந்திரிகள், கவர்னர் என பல்வேறு தரப்பினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தநிலையில் வி.ஐ.பி.க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

தேவையில்லாத அழுத்தம்
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பொதுவாக நான் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்வதை தவறவிடுவதில்லை. ஆனால் இந்த முறை நான் அதை தவிர்த்து இருக்கிறேன். இதனால் மாநில அரசு எந்திரம் அதன் பணியில் இருந்து விலகாமல் இருக்கும். எனது சொந்த அனுபவத்தில் இருந்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மாவட்ட பொறுப்பு மந்திரி போன்றவர்கள் தவிர மீட்பு  மற்றும் நிவாரணப்பணிகளில் நேரடியாக தொடர்பு இல்லாதவர்கள் ஆய்வு பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். வி.ஐ.பி.க்களின் ஆய்வு பணி உள்ளூர் அரசு எந்திரம், அதிகாரிகளுக்கு தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அவர்களுக்கு உள்ள கவனத்தை சிதறவைக்கும்’’ என்றார்.மேலும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் செலார் எம்.எல்.ஏ.வை ஆய்வு பணியின் போது உடன் அழைத்து செல்வது குறித்து கேட்டபோது, ‘‘கவர்னர் அவரை (ஆசிஷ் செலார்) அதிகமாக நம்பினால் அதில் தவறு எதுவும் இல்லை. கவர்னரின் பதவி மாநிலத்திற்கு அதிக நிதியை பெற்று தரும் முக்கியமான பதவி’’ என்றார்.மேலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியவாத காங்கிரஸ் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக கூறினார்.

Next Story