இமாசலபிரதேசம், காஷ்மீர், லடாக்கில் மேகவெடிப்பால் பெருமழை; 16 பேர் பலியான பரிதாபம்


இமாசலபிரதேசம், காஷ்மீர், லடாக்கில் மேகவெடிப்பால் பெருமழை; 16 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 29 July 2021 4:47 AM IST (Updated: 29 July 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

இமாசலபிரதேசம், காஷ்மீர், லடாக்கில் மேகவெடிப்பால் பெய்த பெருமழை, வெள்ளத்துக்கு 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேகவெடிப்பு
பலத்த இடி முழக்கத்துடன் சில நிமிடங்களில் மிகப்பெரும் மழை பெய்கிறபோது, அதை மேகவெடிப்பு என்கிறார்கள். பெரும்பாலும் மலைப்பகுதிகளில்தான் அதிகம் பெய்யும். நிலத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. உயரத்துக்கு மேலிருக்கிற மேகங்களில் இருந்து இந்த மழை உருவெடுப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாகக்கூட பெய்யும். இந்த மேகவெடிப்பால் இமாசலபிரதேசம், காஷ்மீர், லடாக்கில் பெருமழை கொட்டி, பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீரில் 7 பேர் பலி
காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஹொன்சார் கிராமத்தில் நேற்று காலை சுமார் 4.30 மணிக்கு மேகவெடிப்பால் பெருமழை பெய்தது.இதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கு 19 வீடுகள், 21 மாட்டு தொழுவங்கள், ஒரு ரேஷன் கடை, ஒரு பாலம் ஆகியவை பெருத்த சேதம் அடைந்துள்ளதாக 
அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இங்கு போலீஸ், ராணுவம், மாநில பேரிடர் மேலாண்மை படையினர் கூட்டாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காணாமல் போய்விட்ட 14 பேரை தேடும் பணி நடக்கிறது.

அமர்நாத் குகைக்கோவில்
காஷ்மீரில் உள்ள புகழ் பெற்ற அமர்நாத் குகைக்கோவில் அருகே மேகவெடிப்பால் பெரு மழை பெய்தது. ஆனாலும் அந்தக் கோவிலுக்கு எந்த சேதமும் இல்லை. உயிரிழப்பு எதுவும் நேரவில்லை. கொரோனா காலம் என்பதால் அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுதாபம்
இங்கு பெருமழையில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். முடிகிற அனைத்து உதவிகளும் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுடனும், டி.ஜி.பி. தில்பாக் சிங்குடனும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசி நிலைமையை ஆய்வு செய்துள்ளார்.மீட்பு பணி குறித்து காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி.யும், ஊர்க்காவல்படை தலைமை தளபதியுமான வி.கே.சிங் கூறுகையில், “எங்களது மாநில பேரிடர் மீட்பு படையினர் கிஷ்த்வார் விரைந்துள்ளனர். தோடா, உதம்பூர் மாவட்டங்களில் இருந்து மேலும் 2 குழுக்கள் விரைகின்றன. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் விரைகின்றனர். மோசமான வானிலையால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பெருமழை பெய்துள்ள கிராமத்திற்கு கடைசி சாலை இணைப்பில் இருந்து 3 மணி நேரம் நடந்துதான் செல்ல 
வேண்டியதிருக்கிறது” என குறிப்பிட்டார்.ராணுவ செய்தி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சிவில் நிர்வாகத்துக்கு மீட்பு பணியில் உதவுவதற்கு ராணுவமும் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

9 பேரை பலி கொண்ட இமாசலபிரதேசம்
இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலியானது அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. “லாஹால் ஸ்பிட்டியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேரை காணவில்லை. சம்பா மாவட்டத்தில் 2 பேர் பெருமழையில் உயிரிழந்து இருக்கிறார்கள்” என மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்தார்.

7 பேர் உடல்கள் மீட்பு
மேலும், குலுவில் ஒரு பெண், அவரது மகன், நீர்மின்திட்ட அதிகாரி ஒருவர், டெல்லி சுற்றுலாப்பயணி ஒருவர் என 4 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இங்குள்ள உதய்பூர் பகுதியில் தொழிலாளர்களின் 2 கூடாரங்களும், ஒரு பொக்லைன் எந்திரமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.பலியானவர்களில் 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடக்கின்றன.

லடாக்கிலும் மேகவெடிப்பு
லடாக்கிலும் கார்கில் பகுதியில் மேகவெடிப்பால் பெரு மழை பெய்தது. இதில் 2 மின் திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. ஒரு டஜன் வீடுகளும், பயிர்களும் மழை, வெள்ளத்தால் பாதித்துள்ளன. இங்கு உயிரிழப்பு நேரிட்டதாக தகவல் இல்லை.

Next Story