பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி. சைக்கிளில் வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர் அமளி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா இன்று சைக்கிளில் வந்து தனது எதிர்ப்பினை தெரியப்படுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. எனினும் பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விசயங்களை எழுப்பி, அவையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில ராஜ்ய சபை எம்.பி.யான ரிபுன் போரா, நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் இன்று வருகை தந்து பரபரப்பு ஏற்படுத்தினார். பிற எம்.பி.க்களும் அதனை ஆச்சரியமுடன் உற்று நோக்கினர்.
அவர் சைக்கிளின் முன்புறம், பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்களை சுமந்த போஸ்டர்களை ஏந்திய வண்ணம் வந்து நின்றார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலை உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஒரு எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால் இந்த விவகாரங்களை நாங்கள் எங்கே எழுப்புவோம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story