ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு; விவசாயிகள் பலி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த மனு


ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு; விவசாயிகள் பலி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த மனு
x
தினத்தந்தி 1 Aug 2021 4:07 AM IST (Updated: 1 Aug 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று சந்தித்தனர். போராடும் விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முன்னாள் மத்திய மந்திரியும், சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நேற்று சந்தித்தனர். இந்த குழுவில் எம்.பி.க்கள் பல்விந்தர் சிங் பூந்தர், ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி), ஹஸ்னைன் மசூதி (தேசிய மாநாடு), பைசல் முகமது (தேசியமாநாடு கட்சி) உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் சிரோமணி அகாலிதளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி, தேசிய மாநாட்டுக்கட்சி, ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு

அந்த மனுவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு:-

* நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டு வருகிற 3 வேளாண் சட்டங்கள் ரத்து உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு கூட்டு தேர்வு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும்.

* 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நடத்தப்படுகிற போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் பற்றிய விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

* விவசாயிகள் பிரச்சினையிலும், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்திலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story