புதுவையில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை: அமைச்சர் நமச்சிவாயம்


புதுவையில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை: அமைச்சர் நமச்சிவாயம்
x
தினத்தந்தி 3 Aug 2021 2:37 AM GMT (Updated: 3 Aug 2021 2:37 AM GMT)

புதுவையில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

அமைச்சர் ஆலோசனை
புதுவையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அருண், வல்லவன், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா பொறுப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திறக்க வேண்டாம்
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்பதால் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கவேண்டாம் என்று சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;-
புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கொரோனா 3-வது அலை எப்போது வரும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தடுப்பூசி முகாம்
மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள், 10 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் 
போட்டுக்கொண்டுள்ளனர்.முதலில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில் 85 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்காக வருகிற 11, 12, 13-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.பின்னர் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஏனெனில் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்கிறார்கள். எனவே இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

கடும் நடவடிக்கை
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. இதற்காக தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் மீறி கூடுதலாக வசூலித்தால் கடும் 
நடவடிக்கை எடுக்கப்படும்.இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும். கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story