கேரளாவில் 65 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு- சுகாதார மந்திரி தகவல்


கேரளாவில் 65 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு-  சுகாதார மந்திரி தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2021 7:27 PM GMT (Updated: 2021-08-07T00:57:46+05:30)

கடந்த 2-ந் தேதி நிலவரப்படி கேரளாவில் 65 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்களவையில் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கேரளா கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து முழுவீச்சுடன் போராடி வருகிறது. அங்கு டெங்கு, சிக்குன்குன்யா நோய்களை பரப்புகிற கொசுக்களால் ஏற்படுகிற ஜிகா வைரசும் பரவி வரகிறது. இது ஆபத்தானது அல்ல என்றபோதும், கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு பிறக்கிற குழந்தையின் தலை சிறிதாக இருக்கும். 

இந்த வைரஸ் தொற்று முதன் முதலாக இந்தியாவில் 2017-ல் காணப்பட்டது. தற்போது கேரளாவில் பரவி வருகிறது. இதையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில், “கடந்த 2-ந் தேதி நிலவரப்படி கேரளாவில் 65 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் மட்டுமே 61 பேருக்கும், எர்ணாகுளத்தில் 2 பேருக்கும், கோட்டயம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என கூறி உள்ளார்.

 மேலும், இந்த தொற்று பரவலைத்தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் விவரித்துள்ளார்.கேரளாவில் இதுவரை இந்த நோய் தாக்கி எந்த பெண்ணுக்கும் சிறிய தலையுடன் குழந்தை பிறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story