இமாசலபிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு


இமாசலபிரதேசம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Aug 2021 12:34 PM GMT (Updated: 2021-08-11T18:04:31+05:30)

இமாசலபிரதேசத்தில் நெடுச்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் இன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. ராம்பூர்-ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மீது விழுந்தது. மேலும், மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீதும் விழுந்தது.   

இந்த நிலச்சரிவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் கார் சிக்கிக்கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படையினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போதுவரை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவில் பஸ்சில் பயணம் செய்த பலர் இன்னும் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story