கர்நாடகத்திற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க மத்திய சுகாதார மந்திரியிடம் கோரிக்கை விடுப்பேன்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கர்நாடகத்திற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க மத்திய சுகாதார மந்திரியிடம் கோரிக்கை விடுப்பேன்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 12 Aug 2021 5:54 PM GMT (Updated: 2021-08-12T23:24:37+05:30)

அடுத்த வாரம் டெல்லிக்கு சென்று கர்நாடகத்திற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க மத்திய சுகாதார மந்திரியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

முதல்-மந்திரிக்கு வரவேற்பு
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து விட்டது. ஆனாலும் கேரள எல்லையில் உள்ள தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா 400-க்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் அந்த 2 மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரள எல்லையில் மங்களூரு அருகே உள்ள தளப்பாடி சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர், போலீசார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு சென்றார். பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூரு பஜ்பே விமான நிலையம் சென்ற பசவராஜ் பொம்மைக்கு விமான நிலைய வாசலில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த வேதவியாஸ் காமத், பரத் ஷெட்டி உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை
பின்னர் கார் மூலம் மங்களூரு அரசு வென்லாக் ஆஸ்பத்திரிக்கு பசவராஜ் பொம்மை சென்றார். அந்த ஆஸ்பத்திரியில் 32 படுக்கைகளுடன் புதிதாக கட்டப்பட்டு உள்ள தீவிர சிகிச்சை பிரிவை பசவராஜ் பொம்மை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த 5 நாட்களில் 242 பேர் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பற்றி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

5 நாட்களில் 242 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பற்றி எனது கவனத்திற்கு வந்து உள்ளது. குழந்தைகளை கொரோனா பாதிக்காமல் தடுப்பது பற்றி சுகாதாரத்துறையினர், குழந்தைகள் மற்றும பெண்கள் நலத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளேன். குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால்...
மேலும் அவர் கூறும்போது, நான் முதல்-மந்திரி ஆன பின்னர் முதல்முறையாக தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வந்து உள்ளேன். போலீஸ் மந்திரியாக இருந்த போது பல முறை இங்கு வந்து உள்ளேன். தட்சிண கன்னடா மாவட்டம் கேரள எல்லையில் அமைந்து உள்ளது.இதனால் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளில் அதிக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். கொரோனா முதல், இரண்டாவது அலைகள் நமக்கு பாடத்தை கற்றுக்கொடுத்து உள்ளன. அந்த பாடங்கள் மூலம் கொரோனா 3-வது அலையை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். கேரளா, மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகத்தில் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

நெகட்டிவ் அறிக்கை
தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தாங்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டு உள்ளோம். இதனால் எங்களை அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதாக எனது தகவல் கிடைத்து உள்ளது.2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டாலும், கேரளா, மராட்டியத்தில் இருந்து கர்நாடகத்தின் எல்லையோர மாவட்டங்களுக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் அறிக்கையுடன் வந்தால் மட்டுமே நுழைய அனுமதி வழங்கப்படும்.

50 சதவீத படுக்கைகள்
மங்களூரு வென்லாக் ஆஸ்பத்திரியில் 32 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து உள்ளேன். இதுபோன்று மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர், மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர்.கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஹாவேரி, உடுப்பி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க தற்போது இருந்தே குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தப்படும். கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் 50 சதவீத ஐ.சி.யு. படுக்கைககள் ஒதுக்கப்படும். பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.எங்கள் கட்சியை சேர்ந்த பெங்களூரு பொம்மனஹள்ளி எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டியின் காருக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் முழு விவரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நமக்கு வெற்றி
இதன்பின்னர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மங்களூருவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினருடன் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இணைந்து செயல்பட்டால் தான் அனைத்து விஷயத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும்.

கூடுதல் தடுப்பூசி
கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தட்சிண கன்னடாவை மாற்ற அனைவரும் முன்வர வேண்டும். கொரோனா 2 அலைகளையும் எதிர்க்கொண்ட அனுபவம் சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு உள்ளது. 24 மணி நேரமும் அவர் கொரோனாவை தடுக்க பணியாற்றி வருகிறார். அவருடன் இணைந்து கொரோனா 3-வது அலையை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.கர்நாடகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி பற்றாக்குைற உள்ளது. இதனால் பலருக்கு தடுப்பூசி கிடைப்பது இல்லை. இதனால் அடு்த்த வாரம் நான் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கர்நாடகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுப்பேன்.

தனி கவனம்
மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ வசதி குறைபாடுகள் குறித்து முழுமையான விவரங்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். குழந்தைகளை கொரோனா தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளதால், குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story