எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; 8 மத்திய மந்திரிகள் கூட்டாக பேட்டி


எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; 8 மத்திய மந்திரிகள் கூட்டாக பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2021 11:41 PM IST (Updated: 12 Aug 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரத்தை தாழ்த்திய எதிர்க்கட்சிகள், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 8 மத்திய மந்திரிகள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

8 மந்திரிகள் பேட்டி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை சபை காவலர்களாக இருந்த வெளியாட்கள் அடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளன. பேரணியும் நடத்தின.இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. மூத்த மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, அனுராக் தாக்குர், தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, பூபேந்தர் யாதவ், முரளீதரன், அர்ஜுன்ராம் மேக்வால் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது, பியூஷ் கோயல் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளுக்கு தங்களை இந்த நாடு கைவிட்டதை ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் மாநிலங்களவையில் நடந்து கொண்ட விதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரத்தை மேலும் தாழ்த்தி விட்டது.

வெளியாட்கள் அல்ல
அவர்களது அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. நாடும் கண்டனம் தெரிவிக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வெளியில் இருந்து 40 பேர், சபை காவலர்களாக நிறுத்தப்பட்டதாக சரத்பவார் கூறியுள்ளார். அவருக்கு யாரோ தவறான தகவல் அளித்துள்ளனர்.18 ஆண் காவலர்களும், 12 பெண் காவலர்களும் என மொத்தம் 30 பேர் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் வெளியாட்கள் அல்ல. நாடாளுமன்ற பாதுகாப்பு ஊழியர்கள். அவர்கள் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ அல்ல. நாடாளுமன்றத்தை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள். நாங்கள் நியமித்த ஊழியர்கள் அல்ல.சபை காவலர்கள் தங்களை தாக்கியதாக சில பெண் எம்.பி.க்கள் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. உண்மையில், ஒரு பெண் காவலர்தான் தாக்கப்பட்டார். இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளோம்.

சரத்பவாருக்கு கேள்வி
எம்.பி.க்களுக்கு எதிராக மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வருவதற்கு போதிய நேரம் இல்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உயர்மட்ட குழு விசாரிக்கும்.தனது 55 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற செயல்களை பாா்த்தது இல்லை என்று சரத்பவார் கூறியுள்ளார். சக எம்.பி.க்களின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்து, அது சரியா என்று சொல்ல வேண்டும். 55 ஆண்டுகளில் இப்படி சபையில் நடந்ததை பார்த்துள்ளாரா? பெண் சபை காவலர்கள் தாக்கப்பட்டதை பார்த்துள்ளாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

முதலை கண்ணீர்

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
மழைக்கால கூட்டத்தொடரை வீணடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் செயல்பட்டுள்ளன. நேற்றைய சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. சபை காவலர்களை தாக்கினர். தங்களது தவறான செய்கையை மறைக்க பழிபோட்டு வருகிறார்கள். எனவே, முதலை கண்ணீர் வடிப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுராக் தாக்குர் கூறியதாவது:-
அராஜகத்தை தெருவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே செயல்திட்டம். மாநிலங்களவை செயலாளரின் மேஜை, நடனமாடும் இடம் அல்ல. அங்கு நடந்து கொண்டதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் ஸ்டண்ட்
இதற்கிடையே, பா.ஜனதா தரப்பில் அதன் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தனியாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தியது, ஒரு அரசியல் ஸ்டண்ட். இதுபோன்ற போராட்டங்களை நடத்தும் நம்பகத்தன்மையை காங்கிரஸ் இழந்து விட்டது. எதிர்க்கட்சிகள், ஜனநாயகத்தை கொலை செய்ய முயற்சிக்கின்றன. அக்கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story