கவர்னர் அரசியலமைப்பு கடமையை தாமதமின்றி செய்ய வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு

அரசு பரிந்துரையை ஏற்று 12 எம்.எல்.சி.க்களை நியமிப்பதில் கவர்னர் அரசியலமைப்பு கடமையை தாமதமின்றி செய்ய வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரம்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெறும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் 12 நியமன எம்.எல்.சி.க்களின் காலியிடம் ஏற்பட்டது.இந்த காலியிடங்களை நிரப்ப பெயர் பட்டியலை தயாரித்து, அதற்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதோடு, அந்த பட்டியலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் இதுவரை 12 எம்.எல்.சி.க்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த பிரச்சினையில் கவர்னரை ஆட்சியாளர்கள் அவ்வப்போது வசைப்பாடி வருகிறார்கள்.
ஐகோர்ட்டில் வழக்கு
இதற்கு மத்தியில் நாசிக்கை சேர்ந்த ரத்தன் சோலி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தில் கவர்னர் முடிவு செய்யாமல் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:-
அரசியலமைப்பு கடமை
நியாயமான கால அவகாசத்தில் அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டும். அல்லது நிராகரிக்கப்பட வேண்டும். இது கவர்னரின் அரசியலமைப்பு கடமை. இரண்டு அரசியலமைப்பு பதவிகளுக்கு இடையே தகவல் தொடர்பு இடைவெளி இருக்கக்கூடாது. முதல்-மந்திரிக்கு கவர்னர் பதில் தெரிவிக்க வேண்டும். கவர்னர் கோர்ட்டுக்கு பதிலளிக்க வேண்டிய நபர் இல்லை என்றாலும், அரசியலமைப்பு கடமையை உரிய காலத்திற்குள் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு எதிர்பார்க்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதுதொடர்பாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் கூறுகையில், ‘‘கவர்னர் காலதாமதம் இன்றி அரசியலமைப்பு கடமையை செய்ய வேண்டும் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அதற்கு கவர்னர் மதிப்பளித்து விரைவில் 12 எம்.எல்.சி.க்களை நியமிப்பார் என்று நம்புகிறோம்’’ என்றார்.
Related Tags :
Next Story