சுதந்திர தினத்தையொட்டி கூகுள் ‘டூடுலில்’ தமிழ்நாட்டின் பரதநாட்டியம்


சுதந்திர தினத்தையொட்டி கூகுள் ‘டூடுலில்’ தமிழ்நாட்டின் பரதநாட்டியம்
x
தினத்தந்தி 15 Aug 2021 9:10 PM GMT (Updated: 15 Aug 2021 9:10 PM GMT)

இணையவாசிகள் அதிகம் பேர் பயன்படுத்தும் பிரபலமான தேடுபொறி கூகுள். இது சர்வதேச முக்கிய நிகழ்வுகள், தினங்களின்போது அதைப் பிரதிபலிக்கும் வகையில் தனது முகப்பக்க தலைப்பு எழுத்துகளில் படங்களை (டூடுல்) இடம்பெறச் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இந்திய சுதந்திர தினத்தையொட்டி, நம் நாட்டின் பாரம்பரிய நடனங்களை படமாக தீட்டியுள்ளது.

அதில் இடமிருந்து முதலாவதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டிய கலையான பரத நாட்டியம் இடம்பெற்றது. கூகுளின் முதல் எழுத்தான ஆங்கில ‘ஜி’யை குறிக்கும் வகையில் முத்திரை பிடித்தபடி பரதநாட்டிய பெண்ணின் படம் அமைந்திருக்கிறது. தொடர்ந்து, மற்ற எழுத்துகளை குறிக்கும்விதமாக பிகு, பாங்ரா, சாகு, கர்பா போன்ற நடனக்காரர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. இந்த படத்தை வரைந்திருப்பவர், கொல்கத்தாவைச் சேர்ந்த ஓவியரான சயான் முகர்ஜி. அவர் கூறுகையில், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் சிறப்பம்சம். அதை நான் இந்த ‘டூடுலில்’ கொண்டுவர முயன்றேன் என்றார்.

சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவுக்கு வாழ்த்து கூறிய கூகுள் நிறுவனம், சுதந்திர தினத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் என்று தெரிவித்தது.

Next Story