தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு மேலும் 10 நாள் கெடு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு மேலும் 10 நாள் கெடு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Aug 2021 9:37 PM GMT (Updated: 16 Aug 2021 9:37 PM GMT)

தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு மேலும் 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.

ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் அமைக்கக்கோரிய பொதுநல மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கு உத்தரவு
தீர்ப்பாயங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் இருப்பது வருந்தத்தக்க நிலை என்றும், இது தொடர்பாக மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி உத்தரவிட்டது.தீர்ப்பாயங்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமா அல்லது மூடப்பட வேண்டுமா என்பதில் மத்திய அரசு தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

கால அவகாசத்துக்கு கோரிக்கை
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நியமனங்களுக்கான செயல்முறைகள் தொடங்கிவிட்டன. சில நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. விரிவான பதிலை அளிக்க 2 வாரம் அவகாசம் தேவை என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார்.அப்போது தலைமை நீதிபதி, செல்லாது என அறிவிக்கப்பட்ட சட்டங்கள் மீண்டும் உயிர்ப்பெறுகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதாக தெரியவில்லை. நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவசர சட்டம் செல்லாது என தெரிவிக்கப்பட்ட பிறகு அதையே மசோதாவாக நிறைவேற்ற வேண்டிய நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும்.

10 நாட்கள் அவகாசம்
மத்திய தீர்ப்பாயத்தில் ஒரு நியமன உத்தரவை காட்டுங்கள். இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பும்போதெல்லாம் இதே பதிலைத்தான் மத்திய அரசு அளிக்கிறது. தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மேலும் 10 நாட்கள் அவகாசத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறோம் என உத்தரவிட்டார்.

காங்கிரஸ் ரிட் மனு
இதற்கிடையே, தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story