இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக ஒரே நாளில் 88 லட்சம் தடுப்பூசி போட்டு சாதனை

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் ஒரே நாளில் 88.13 லட்சம் தடுப்பூசி போட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திட்டத்துக்கு வரவேற்பு
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் முன்னுரிமை அடிப்படையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சென்ற ஜூன் மாதம் 21-ந்தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டிய மக்கள், இரண்டாவது அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப்பார்த்து, தடுப்பூசி போட்டு உயிரை காப்பாற்றிக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்தனர்.இதனால் தடுப்பூசிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அரசு தடுப்பூசி முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
ஒரே நாளில் 88.13 லட்சம் பேர்
அந்த வகையில் நேற்று காலை 7 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 88 லட்சத்து 13 ஆயிரத்து 919 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் போடப்பட்ட அதிகபட்ச கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை இதுதான். எனவே இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியா ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி போட்டு சாதித்துள்ளது. உலகளாவிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இந்தியாவின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார். இவர்களில் 70 லட்சத்து 76 ஆயிரத்து 405 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 17 லட்சத்து 37 ஆயிரத்து 514 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதுவரையில் எவ்வளவு?
நாட்டில் இதுவரையில் 55 கோடியே 47 லட்சத்து 30 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவர்களில் 43 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரத்து 809 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். 2 டோசும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 12 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரத்து 800 ஆகும். இது வரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் 55 கோடியே 81 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் பயன்படுத்தியது போக 2.25 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் கையிருப்பாக உள்ளன.
Related Tags :
Next Story