லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவனே திடீர் ஆய்வு


லடாக் எல்லையில் ராணுவ தளபதி நரவனே திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2021 10:29 PM GMT (Updated: 1 Oct 2021 10:29 PM GMT)

லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுடெல்லி, 

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே 5-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைப்பகுதியில் இருந்து வீரர்கள் படிப்படியாக திரும்பப்பெறப்பட்டனர். ஆனாலும், தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இரு நாடுகளும் படைகளை அங்கு நிலைநிறுத்தியுள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் சுமார் 100 சீன ராணுவ வீரர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் பரஹோடி பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், சில மணிநேரங்கள் பரஹோடி பகுதிக்குள் நுழைந்திருந்த சீன படையினர் இந்திய படையினர் வருவதற்குள் இந்திய எல்லையில் இருந்து பின்வாங்கி தங்கள் நாட்டிற்கே சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்திய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லடாக் எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை நிலைநிறுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தில் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று லடாக் பயணம் மேற்கொண்டார். கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு பணிகளை நரவனே ஆய்வு செய்தார். மேலும், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தினார். 

இந்தியா-சீன எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் ராணுவ தளபதியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

Next Story