100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டாட்டம்


100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:19 AM GMT (Updated: 21 Oct 2021 10:19 AM GMT)

நாட்டில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்திய சாதனையை கொண்டாடும் வகையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.




புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.  கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த நிலையில், மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயது கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.  இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.

100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை நாடு முழுவதும் செலுத்திய சாதனையை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.  இதன்படி, மருத்துவமனையில் ஊழியர்கள், நூறு கோடி கொரோனா தடுப்பூசிகள் என ஆங்கிலத்தில் வண்ண மலர்களால் அலங்கரித்து இருந்தனர்.  இதேபோன்று, மலர்களை கொண்டு தோரணங்களையும் அமைத்து இருந்தனர்.


Next Story