உள்ளூர் தொற்றாக கொரோனா மாறுகிறதா? - நிபுணர்கள் கருத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Oct 2021 2:24 AM GMT (Updated: 24 Oct 2021 2:24 AM GMT)

அச்சுறுத்தல் இல்லாத உள்ளூர் தொற்றாக கொரோனா மாறுகிறதா என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

100 கோடி தடுப்பூசி என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. கொரோனா தொற்று பரவலும், இறப்புகளும் கட்டுக்குள் உள்ளன. ஆஸ்பத்திரி சேர்க்கையும் குறைந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதெல்லாம் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில பண்டிகைக்காலம் தொற்று பரவலுக்கு உகந்த காலம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால், கொரோனா மீண்டும் எழுச்சி பெறும் ஆபத்து இருக்கிறது.

கொரோனாவின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

சாஹித் ஜமீல் (கவுரவ பேராசிரியர், அசோகா பல்கலைக்கழகம், அரியானா) :-

நாம் கொரோனாவை பொறுத்தமட்டில் ‘எண்டெமிக் ’என்னும் உள்ளூர் நிலையில் இருக்கிறோமோ என்பதை உறுதியாக கூற முடியவில்லை. 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைந்ததற்காக கொண்டாடுகிற சூழலில், இன்னும் நாம் கொஞ்ச தூரம் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. நாம் உள்ளூர் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை.

(கொரோனாவில் உள்ளூர் நிலை என்பது கொரோனா வைரஸ் தொடர்ந்து நமது சமூகத்தில் இருக்கும். ஆனால், அதன் வீரியமும் பரவும் ஆற்றலும் குறைந்துவிடும். சரியான நேரத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உள்ளூர் அளவிலான தொற்று நோய்களால் பெரிய பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். பல ஆயிரம் ஆண்டுகளாக மலேரியா அப்படித்தான் இருந்து வருகிறது. அது தவிரச் சாதாரண சளி, பெரியம்மை ஆகியவையும் அப்படித்தான் நமது சமூகத்தில் தொடர்ந்து இருக்கின்றன.)

தினமும் 40 ஆயிரம் பாதிப்பு என்ற நிலை, கடந்த 3 மாதங்களில் தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு மெல்ல மெல்ல குறைந்து வந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.2 சதவீத அளவுக்கு நிலையாக உள்ளது. இது, நமது நாட்டில் இன்னும் தடுப்பூசி போடவேண்டியதிருக்கிறது என்பதை காட்டுகிறது.

முராட் பனாஜி (பேராசிரியர், மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து):-

கொஞ்ச காலமாக கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என்பதால் கொரோனா உள்ளூர் நோயாகி விட்டது என்று எடுத்துக்கொண்டு விட முடியாது. நாட்டின் சில இடங்களில் அந்த நிலை நெருங்கி உள்ளது. அதற்கு இன்னும் அதிகமான தரவுகள் வேண்டும். அது எளிதில்லை.

உதாரணத்துக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில், ஏற்கனவே தொற்று பாதித்தவர்களில் மீண்டும் எத்தனை பேருக்கு தொற்று தற்போது ஏற்பட்டிருக்கிறது என்று நமக்கு தெரியாது. உள்ளூர் நோயாக மாறும் எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. இனி வரும் காலங்களிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைள் தொடர வேண்டும்.

ரமணன் லட்சுமிநாராயணன் (பொருளாதார வல்லுனர், தொற்றுநோயியல் நிபுணர், அமெரிக்கா):-

கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பதை பார்க்க இன்னும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆக, கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்கிறது. மக்கள் கையில்தான் அதன் எழுச்சியும், வீழ்ச்சியும் இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றி வருகிறபோது, கொரோனா தொற்றும் உள்ளூர் நோயாகும். அப்படி மாறுகிறபோது, அதன் வீரியமும், பரவும் ஆற்றலும் குறையும். அது சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும். ஆனால் அதற்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

Next Story