‘நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம்’ இன்று தொடக்கம் !
‘பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’ திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
புது டெல்லி,
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் செல்கிறார். அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த, ‘பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இன்று உத்தரபிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இந்த திட்டத்தை மதியம் 1.15 மணிக்கு தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ‘பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்த திட்டம் உதவும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாத பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காக 2025-2026ம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் 64,180 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதார மிஷன் திட்டத்துக்கு கூடுதலாக இந்த திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரணாசியில் ரூபாய் 5,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, காலை 10.30 மணிக்கு சித்தார்த் நகரில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார். சித்தார்த்நகர், எடாஹ், ஹர்டோய், பிரதாப்கர், பதேபூர், டியோரியா, காசிப்பூர், மிர்சாபூர், ஜாவ்ன்பூர் ஆகிய 9 இடங்களில் இந்த மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
‘ஜாவ்ன்பூரில் உள்ள கல்லூரி உ.பி. மாநில அரசால் நடத்தப்படும். மத்திய அரசின் ‘மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் சேர்ந்து மருத்துவ கல்லூரிகள் அமைக்கும் திட்டத்தின்’ அடிப்படையில் ஏனைய கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மத்திய அரசின் திட்டத்தில், பின்தங்கியுள்ள மாவட்டங்கள் மற்றும் மருத்துவ சேவைகள் குறைந்த அளவில் உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மண்சுக் மண்டாவியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
Related Tags :
Next Story