உ.பி: 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி


உ.பி: 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Oct 2021 9:31 AM GMT (Updated: 25 Oct 2021 9:36 AM GMT)

உ.பி.யில் நடைபெற்ற மருத்துவ கல்லூரிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி போஜ்புரி மொழியில் உரையாற்றினார்.

லக்னோ,

பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க இன்று உத்தரபிரதேசம் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் புத்தர் சிலை கொடுத்து வரவேற்பு அளித்தார்.

பின்பு சித்தார்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
சித்தார்த்நகர், எடாஹ், ஹர்டோய், பிரதாப்கர், பதேபூர், டியோரியா, காசிப்பூர், மிர்சாபூர், ஜாவ்ன்பூர் ஆகிய 9 இடங்களில் இந்த மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,

“மகாத்மா புத்தர் பல வருடங்களாக வாழ்ந்த நிலத்தில் இருந்து 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. ஆரோக்கியமான இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு பெரும் வெற்றிப்படி ஆகும். இங்குள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 9 மருத்துவ கல்லூரிகளின் மூலம்  கூடுதலாக 2500 படுக்கைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், புதிதாக 5000க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் துணை-மருத்துவ பணியாளர்கள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் பூர்வாஞ்சல் பகுதி வட இந்தியாவின் மருத்துவ மையமாக திகழும். கிழக்கு உத்தரபிரதேச இளைஞர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவு இப்போது நனவாகியுள்ளது’’ என்று கூறினார்.

Next Story