சச்சின் வாசேயை ஜெயிலில் இருந்து வெளியே விட்டால் தலைமறைவாகி விடுவார்; ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. வாதம்


சச்சின் வாசேயை ஜெயிலில் இருந்து வெளியே விட்டால் தலைமறைவாகி விடுவார்; ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. வாதம்
x
தினத்தந்தி 26 Oct 2021 8:26 PM GMT (Updated: 26 Oct 2021 8:26 PM GMT)

சச்சின் வாசேயை ஜெயிலில் இருந்து வெளியேவிட்டால் தலைமறைவாகிவிடுவார் என ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

வீட்டுக்காவலுக்கு எதிர்ப்பு

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே சிக்கிய வெடிகுண்டு கார் வழக்கு மற்றும் ஹிரேன் மன்சுக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே தற்போது தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தனக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டு காவலில் இருந்து உடல்நலனை கவனித்து கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். உடல் பூரணகுணமாகும் வரை வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிதின் ஜாம்தார், எஸ்.வி. கோட்வால் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது தேசிய புலனாய்வு பிரிவினர் (என்.ஐ.ஏ.) சச்சின்வாசேவை வீட்டு காவலில் அடைக்க அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைமறைவாகிவிடுவார்

இதுகுறித்து அவா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘‘சச்சின் வாசேவை வீட்டுக்காவலில் அனுமதித்தால் அவர் ஐகோர்ட்டின் எல்லையில் இருந்து தலைமறைவாகி விடுவார். மேலும் சாட்சியங்கள், ஆதாரங்களையும் அழித்துவிடுவார். சச்சின் வாசே மும்பையில் செல்வாக்கு மிக்கவர். அவருக்கு சாட்சியங்கள் யார், அவர்களின் முகவரி எது என கண்டுபிடிப்பது சிரமமானது இல்லை" என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சச்சின் வாசே தரப்பிற்கும், சச்சின் வாசேவின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சிறை துறையினருக்கும் உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Next Story