இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு கண்டறியப்படவில்லை - மன்சுக் மாண்டவியா


இந்தியாவில் இதுவரை ‘ஒமிக்ரான்’ பாதிப்பு கண்டறியப்படவில்லை - மன்சுக் மாண்டவியா
x
தினத்தந்தி 30 Nov 2021 7:47 AM GMT (Updated: 2021-11-30T13:17:44+05:30)

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் வைத்துள்ள கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் கடந்த வாரமும் புதிய உருமாறிய தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று முந்தைய திரிபுகளை விட மிகவும் வீரியமானது என தெரிய வந்துள்ளது. எனவே இந்த வைரசை கவலைக்குரிய தொற்று பட்டியலில் சேர்த்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதற்கு ஒமிக்ரான் என பெயரும் சூட்டியுள்ளது.

இந்த வைரசுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் பல நாடுகளில் இந்த வைரஸ் தடம் பதித்து விட்டது. அந்தவகையில், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், சீனா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் என அந்த பட்டியல் நீண்டு வருகிறது.

இந்த வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து உஷாரான மத்திய அரசு, ஒமிக்ரான் வைரஸ் எந்த வகையிலும் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக தொற்று கண்டறியப்பட்டு உள்ள நாடுகளை ஆபத்தான நாடுகளாக பட்டியலிட்டுள்ள அரசு, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து உள்ளது.

இந்த வைரசால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கும் நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், “இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமிக்ரான் வைரசை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம். ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Next Story