“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” - ராகுல் காந்தி டுவிட்


“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” - ராகுல் காந்தி டுவிட்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:21 AM GMT (Updated: 30 Nov 2021 8:21 AM GMT)

மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.,க்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார். இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 6 பேர் காங்கிரஸ் எம்.பி.க்கள். தலா 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள். 

அவர்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் அறிவித்தார். அத்துடன், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதனையடுத்து 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு இன்று உறுதியாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கோரினால், அவர்கள் மீதான தடை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மக்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா..? மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று ராகுல் காந்தி இந்தியில் பதிவிட்டுள்ளார். Next Story