சீக்கிய புனித தளத்தில் பாகிஸ்தான் அழகி போட்டோ சூட்...இந்தியா அதிருப்தி


சீக்கிய புனித தளத்தில் பாகிஸ்தான் அழகி போட்டோ சூட்...இந்தியா அதிருப்தி
x
தினத்தந்தி 1 Dec 2021 10:42 AM IST (Updated: 1 Dec 2021 10:42 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் சவுலேஹா போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை வெளியிட்டிருந்தார்

டெல்லி ,

பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனித தளத்தின் அருகே பாகிஸ்தான் மாடல் போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில், பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

சீக்கியர்களின் புனித தளங்களில் ஒன்று குருத்வாரா தர்பார் சாஹிப். இது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் இந்த தர்பார் சாஹிப் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் முன்பு பாகிஸ்தான் மாடல் செளலேஹா போட்டோசூட் நடத்தி, அதன் படங்களை வெளியிட்டிருந்தார். பொதுவாக குருத்வாராவிற்கு செல்லும் போது அனைவரும் தலை மூடியை மூடி இருக்க வேண்டும். ஆனால் இந்த படங்களில் செளலேஹா தனது தலை மூடி தெரியும்படி  இருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

செளலேஹா சீக்கிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பலரும் இணையத்தில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து அந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் செளலேஹா தனது செயலுக்கு மன்னிப்பைக் கேட்டிருந்தார். சீக்கிய கலாச்சாரத்தைத் தான் மதிப்பதாகவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்றும் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசும் பாகிஸ்தான் தூதரிடம் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. கர்தார்பூர் சாஹிப்பில் போட்டோஷூட் தொடர்பாகப் பாகிஸ்தானின் இரண்டாவது மூத்த தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இது  கண்டிக்கத்தக்கச் சம்பவம். இந்தியா மற்றும் சீக்கிய சமூகத்தினரின் உணர்வுகளை இது ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களின் மத வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துவது மற்றும் அவமரியாதை செய்வது போன்ற சம்பவங்கள் அங்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இது பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைக்கு மரியாதை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் எனப் பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது" என்றார்.


Next Story