ஒட்டுமொத்த நாடும் மம்தா...மம்தா என கோஷமிடுவது போல் நினைப்பு ...! மம்தா பானர்ஜி மீது காங்கிரஸ் தாக்கு


ஒட்டுமொத்த நாடும் மம்தா...மம்தா என கோஷமிடுவது போல் நினைப்பு ...! மம்தா பானர்ஜி மீது காங்கிரஸ் தாக்கு
x
தினத்தந்தி 2 Dec 2021 3:02 PM IST (Updated: 2 Dec 2021 3:26 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸை பலவீனப்படுத்த மம்தா முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி  மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும் அவர், மராட்டிய அரசியல் கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா, அப்படீன்னா என்ன? ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசியலில் தொடர்ச்சியாக செயல்படுவது அவசியம், தொடர்ந்து வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய முடியும்” என்று ராகுல் காந்தியையும் போகிற போக்கில் விமர்சித்தார் மம்தா.

மேலும்  “நமக்குத் தேவை பா.ஜ.க.வை தூக்கி எறியுங்கள், தேசத்தைக் காப்பாற்றுங்கள் என்பதுதான். மாற்று கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் இதனை நான் தனியாக செய்ய முடியாது. போராடத் தயாராக இல்லாதவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அனைத்து கட்சிகளும் அந்த லட்சியத்தை நோக்கி போராட வேண்டும்.

அரசியல் ரீதியாக பா.ஜ.க. இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று நான் போராடுகிறேன். காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் போட்டியிடலாம் என்றால் நாங்கள் ஏன் கோவாவில் போட்டியிடக்கூடாது என கூறினார். 

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறும் “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றால் என்ன என்று மம்தா பானர்ஜிக்குத் தெரியாதா? பைத்தியக்காரத்தனத்தை அவர் தொடங்கி விட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் ஏதோ மம்தா மம்தா மம்தா என்று கூக்குரலிடுவது போல் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதே போல் இந்தியா என்பது வங்காளம் மட்டுமல்ல. கடந்த தேர்தலில் அவர் கையாண்ட உத்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகி வருகின்றன.

2012-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 மந்திரிகள் இருந்தனர். அப்போது அரசை கவிழ்க்க ஆதரவை வாபஸ் பெற்றவர்தானே மம்தா, இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி  என்றால் என்ன என்று கேட்கிறார். ஆனால் அன்று அவரது சூழ்ச்சி பலிக்கவில்லை மற்ற கட்சிகள் அன்று எங்களுக்கு ஆதரவு அளித்தன.

மம்தா இன்று பெரிய ஆளாக தன்னை நினைத்துக் கொள்ள அவருக்குப் பின்னால் மோடி இருக்கிறார். அதனால்தான் காங்கிரசை பலவீனப்படுத்த அவர் முயற்சி செய்கிறார்” என்று தாக்கினார்.

மேலும் ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய மம்தாவைக் கண்டித்துக் கூறிய காங்கிரஸ் கட்சி, “ராகுல் காந்தியை விமர்சித்து விட்டு எந்த ஒரு தனிக்கட்சியும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராட முடியாது. ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் காவல் புரிய காங்கிரஸ் கட்சிதான் ஒரே மாற்று” என்று தெரிவித்துள்ளது.

Next Story